For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!

03:54 PM Mar 23, 2024 IST | Web Editor
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்
Advertisement

திருச்சுழி ஸ்ரீதுணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் சிவாய நமக கோஷத்துடன் பங்குனி மஹா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்
மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீதிருமேனி நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனித் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் தினந்தோறும் சிம்ம வாகனம், கிளி வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் அம்பாள் மற்றும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். நேற்றையதினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், இன்று பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. விண்ணை முட்டும் அளவு சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் சிவாய நமக கோஷத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் ஏராளமான பெண்களும், இளைஞர்களும் தேரோடும் வீதிகளில் பக்தி பரவசமுடன்
திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். திருத்தேரானது நகரின் முக்கிய வீதிகளான தீயணைப்பு நிலையம், மேலரத வீதி, தெற்கு ரத வீதி, தேவர் சிலை, காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக சென்று இறுதியாக கோயிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு மகிழ்ந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சுழி காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags :
Advertisement