‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா மற்றும் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.64 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கோயில் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில், திருவிழா மற்றும் பிப்ரவரி மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணி கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம், ஶ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர்.
இதில் கோயில் உண்டியலில் ரூ. 4 கோடியே 64லட்சத்து 92 ஆயிரத்து 542 ரூபாய்
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 2390 கிராம் தங்கமும், 51
ஆயிரம் கிராம் வெள்ளியும், 727 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.