ஜார்க்கண்ட் : பலாமு புலிகள் காப்பகத்தில் ஒரே மாதத்தில் 3வது யானை உயிரிழப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பலாமு புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக சனிக்கிழமை பிற்பகல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் பெட்லா எல்லைக்குட்பட்ட தெல்ஹி மலையில் யானையின் உடலை மீட்டனர்.
இது லதேஹர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரியில் இறந்த மூன்றாவது காட்டு யானையாகும். யானைகளுக்கு இடையிலான மோதலின் விளைவே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“வியாழக்கிழமை டீன் கோரியா அருகே மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானை பலத்த காயமடைந்தது. யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அது சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறியது. சனிக்கிழமை யானையைத் தேடும் போது தெல்ஹி மலைக்கு அருகில் அதன் சடலம் கண்டெடுக்கப்பட்டது” என பெட்லா வன அதிகாரி உமேஷ் துபே கூறினார். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 16 அன்று, காப்பகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிப்ரவரி 7 ஆம் தேதி, லதேஹர் மாவட்டத்தில் உள்ள சந்த்வா காவல் நிலையப் பகுதியில் உள்ள துத்மதியா காட்டில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். இந்த யானைகளும் மற்ற யானைகளுடனான மோதலில் இறந்ததாகவே வனத்துறையினர் தெரிவித்தனர்.