#Madurai அழகர்கோயிலில் நவ.13ல் தைலக்காப்பு உற்சவம்... ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை அழகர் கோயிலில் நவம்பர் மாதம் தைலக்காப்பு உற்சவம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள ஶ்ரீகள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு உற்சம் நவ.13ம் தேதி நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில், ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளி திருமஞ்சனம் காணும் நிகழ்வு தைலக்காப்பு உற்சவம் ஆகும். மூன்று நாட்கள் நடைபெறும், இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, 11 மற்றும் 12ஆம் தேதிகளில், ஶ்ரீகள்ளழகர் மேட்டுக்கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தொடர்ந்து, 13ஆம் தேதி காலை 7 மணியளவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து, சுந்தராஜபெருமாள் சடைமுடியுடன், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை மற்றும் பச்சை வர்ண கிளியுடன் அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் நூபுரகங்கைக்கு புறப்பாடாகி செல்லும் நிகழ்வு நடைபெறும்.
தொடர்ந்து, மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை மாதவி மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி, சந்தனாரி, திருத்தைலங்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நூரகங்கை தீர்த்தத்தில் முழு அலங்காரத்துடன் பெருமாள் நீராடும் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த தைலக்காப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.