”ஜல்லி விலையை ரூ.1900 ஏற்றிவிட்டு ரூ.1000 குறைத்துள்ளனர்” - இபிஎஸ் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கத்தோடு பொற்கால ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல், போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடும், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றின் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாக தெரிவித்தார். இந்த விலை உயர்வை குறைக்க போதிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நீர் வளம், மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், “குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எம் சாண்ட் ஜல்லி விலையை யூனிட் ஒன்றுக்கு 1900 ரூபாய் வரையில் உயர்த்திவிட்டு, ஆயிரம் ரூபாயை மட்டும் குறைத்து இருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வேதாரணியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ் மணியன், “கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்பது கனவு திட்டமாகவே ஏழை எளிய மக்களுக்கு இருக்கும்” என்றார்.