“புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” - மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!
சுகுமார் - அல்லு அர்ஜூன் கூட்டணியில் யூ/ஏ தணிக்கை சான்றிதழ் பெற்று கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2 . இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பேசியுள்ளார்.
மாணவர்களின் நடத்தை குறித்து தெலங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலக் கல்வி ஆணையத்துடன் கடந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்ற ஹைதராபாத்தின் யூசுப்குடாவைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவர்களின் நடத்தை குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் பேசியதாவது “மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்கிறார்கள். ஆபாசமாகப் பேசுகிறார்கள். இது அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலைமைதான். மாணவர்கள் தற்கொலை முடிவுகளை எடுப்பதால் தண்டனை கொடுக்க பயமாக உள்ளது. ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்.
மாணவர்களிடம் நீ செய்வது தவறு என்று சொல்ல முடியாமல் ஒரு ஆசிரியராக தோற்றுப்போவதாக உணர்கிறேன். நான் பணிபுரியும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் புஷ்பா படத்தை பார்த்து கெட்டுப்போயுள்ளனர். மாணவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர்”
இவ்வாறு அந்த ஆசிரியை பேசியுள்ளார்.