“நிதியை பெற்றுத் தராமல் திசைமாற்ற பார்க்கிறார்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பேட்டி!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா சென்னையில் இன்று(பிப்.20) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
“அண்ணாமலை ஒருமையில் பேசியதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்த பிரச்சனையை திசைமாற்ற, மடைமாற்ற பார்க்கிறார்கள். கேட்கும் நிதியை பெற்றுத் தராமல் சவால் விடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் 2016ல் கோ பேக் மோடி என சொன்னபோது மக்களை சந்திக்க பயந்து மோடி வந்து சென்றார். அவருக்கு கருப்பு கொடி காட்டி பலூன் விட்டதெல்லாம் ஞாபகம் இருக்கும்.
ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்.இது எனக்கும் அவருக்குமான பிரச்னை கிடையாது. தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்டு வாங்குகிறோம். இதற்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்ய சொல்லுங்கள். தனியார் பள்ளிகள் மத்திய அரசின் அனுமதி வாங்கி தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒப்பீடு செய்ய வேண்டாம்.
தனியார் பள்ளிகளில் காலை இலவச உணவு, சீருடைகள் கொடுக்கிறார்களா?தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு விளையாட சென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்றுள்ளனர். இன்று ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தனர். உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவில் அங்கு ஆளும் பாஜக அரசும், மத்திய அரசும் கூட்ட மேலாண்மை குறித்து ஒன்றுமே தெரியாமல் மக்களை அலைக்கழித்துள்ளார்கள். எத்தனை இறப்புகள் ஏற்பட்டது என்பது குறித்த எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.
மக்கள் அங்கு ரயில் ஏற முடியாமல் தவித்ததை எல்லாம் பார்த்தோம். இவ்வளவு நடந்த பிறகும் அங்கு இருக்கக்கூடிய மாநில அரசும், மத்திய அரசும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் காலை ஆறு மணிக்கு கிடைத்தது. உடனடியாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் பேசி அவர்களை விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்தார்.
உடனடியாக அந்த விளையாட்டு வீரர்களுக்கு உணவு, விமான பயணச்சீட்டு ஆகியவை ஒதுக்கப்பட்டு, இன்று மாலையை வாரணாசியிலிருந்து பெங்களூர் வந்து, அங்கிருந்து சென்னை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்காதது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி முதலமைச்சரும், தோழமைக் கட்சிகளுடனும் ஆலோசிக்கவுள்ளார்”
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.