“மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு இன்று(மார்ச்.10) தொடங்கியது.
இன்றைய அமர்வில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, புதிய தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வை தராமல் இருப்பது பலி வாங்கும் நடவடிக்கை .இது மாணவர்களை பாதிக்கிறது. மாநிலங்கள் இது போன்ற கொள்கையையை நிராகரித்தால் நிதி மறுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாடு அரசுடன் கடந்த மாதங்களில் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். அவர்கள் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள். ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு அரசு, மத்திய PM Shri திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்து. கேள்வி எழுப்பிய எம்பி மற்றும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் என்னை சந்திக்க வந்து அதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்திகிறார்கள். மீண்டும் எங்களுடன் வந்து பேசலாம், நாங்கள் பேசுவதற்கு தயார்.
பாஜக ஆளாத மாநிலங்கள் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் மொழியை வைத்து விளையாடி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இந்திய அளவில் ஒரே மாதிரியான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை ஏற்றுக்கொல்வதற்கு தயாராக இருந்தார். இப்போது அரசியல் செய்கிறார்கள்” என்று கூறினார். இதனிடையே அவர், தமிழ்நாடு எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என்று கூறியதற்கு திமுக எம்பிகள் எழுந்து எதிர்ப்பு முழக்கமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.