“வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”
தீவிரமடையும் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷயா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்த போராட்டம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் சென்னைக்கு நேரடியாக கப்பல் மூலமாகவும், பைப் லைன் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது. மேலும், சென்னையில் இருந்தே மற்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.