”சிறுவாணி தண்ணீர் போல் சுத்தமான ஆட்சி அமையும்” - கோவையில் தவெக தலைவர் விஜய் பேச்சு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் கருத்தரங்கு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “நேற்று(ஏப்ரல்.26) பேசும்போது இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் அல்ல என்று நான் சொன்னேன். ஏனென்றால் தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. அதே நேரத்தில் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறதென்றால், அதை எந்த அளவுக்கும் போய் செய்ய தயங்க மாட்டோம். நம்முடைய ஆட்சி அமைந்ததும் சுத்தமான அரசாக இருக்கும்.
நம் அரசில் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எவ்வித தயக்கமின்றி நம்முடைய பூத் லெவல் ஏஜெண்ட்ஸ் தைரியமாக மக்களை சந்தியுங்கள். அப்படி நீங்க மக்களை சந்திக்கும்போது அண்ணா சொன்னதை இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய். இதை புரிந்துகொண்டு செயல்பட்டால், உங்க ஊர் சிறுவாணி தண்ணீர் போல் சுத்தமான ஆட்சியாக அமையும். இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையாக நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும். அதனால், இதை மக்களிடம் கொண்டு சேருங்கள்.
பூத்துக்கு வந்து ஓட்டு போடுபவர்களுக்கு உதவியாக இருப்பது நமது கடமை. குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு போகிறதுபோல், பண்டிகையை கொண்டாடுவதுபோல், நமக்காக குடும்பம் குடும்பமாக ஓட்டு போடுகிற மக்கள் அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தை மக்களிடையே உருவாக்குங்கள். வெற்றிக்கு நீங்கள்தான் முதுகெலும்பு. அதை மனதில் கொண்டு எல்லோரும் செயல்படுங்கள்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் கூறினார்.