”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை”- பிரியங்கா காந்தியின் குற்றசாட்டுக்கு இஸ்ரேல் தூதர் மறுப்பு!
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் ”இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களை படுகொலை செய்கிறது என்றும், காசா மக்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், உங்கள் வஞ்சகம்தான். 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே இஸ்ரேல் கொன்றது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொதுமக்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாஸின் கொடூரமான தந்திரங்களே காரணம் . வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவதின் காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. ஆனால் ஹமாஸ், அவற்றைக் கைப்பற்றி அதன் மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை. ஹமாஸ் அளிக்கும் எண்களை நம்ப வேண்டாம்"
என்று அவர் தெரிவித்துள்ளார்.