“குழந்தைகளை புறக்கணித்தால் தேர்தலில் புறக்கணிப்போம்...” - பாஜகவை கண்டித்த தேவநேயன் அரசு!
குழந்தைகள் நலன், உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து எந்த விதமான வாக்குறுதிகளையும் பாஜக கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஏற்கனவே பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், ஆளுங்கட்சியான பாஜக எப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்ற இந்த தேர்தல் அறிக்கைக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசும் பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசித்தேன். குழந்தை என்ற வார்த்தையே இல்லை. 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த நாட்டில் 40% பேர் உள்ளனர். இவர்கள் தான் குழந்தைகள். குழந்தைகளின் உரிமை மீறல்கள் மற்றும் மறுப்புகள் மிகவும் அதிகரித்து வரும் இன்றைய நாளில், குழந்தையின் சிறந்த நலன், உரிமை, மற்றும் பாதுகாப்பு என்பதைப் பற்றி எந்த விதமான வாக்குறுதிகளையும் கொடுக்காதது மிகவும் கண்டிக்கதக்கதாகும். குழந்தைகளைப் புறக்கணிக்கும் இது போன்ற அரசியல் கட்சிகளை வருகிற தேர்தலில் புறக்கணிப்போம். குழந்தைகளின் நலனே இந்தியாவின் நலம் என்பதை உணர வைப்போம். Save Child Save INDIA”
இவ்வாறு தேவநேயன் அரசு பதிவிட்டுள்ளார்.