“வெள்ளை குடையும் இல்லை, எதிர்க்கட்சி தலைவரிடம் இருக்கும் காவி குடையும் இல்லை” - டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!
பிரதமர் மோடி தலைமையில் இன்று(மே.24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன பாக்கி இருக்கிறது, எனபதை பட்டியலிட்டு பேசியிருக்கிறேன். குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதி மற்றும் கோவை மற்றும் மதுரைக்கான மருத்துவ திட்டங்கள். அங்குள்ள விமான நிலைய விரிவாக்கம் பற்றி பேசினேன். அடுத்தது செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை வைத்தேன்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மாண்பு நிலைநிறுத்துவது தொடர்பாகவும் கிறிஸ்தவர் ஆதிதிராவிடர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன்.
நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அவரும் நேரம் ஒதுக்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி சொன்ன கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினேன். அவரு செய்யமாட்டேன் என்றா சொல்லப்போகிறார். செய்வேன் என்றுதான் சொல்லுவார். செய்வாரா? என்பதை போகப்போக பார்ப்போம்.
அமலாக்கத்துறை சோதனை தொடர்பான உச்சநீதிமன்ற கருத்து நியாயமானது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை குடை காட்டப்போவதாக விமர்சித்தார். என்னிடம் வெள்ளை குடையும் இல்லை, அவரிடம் உள்ளதுபோல் காவி குடையும் இல்லை. சோனியா மற்றும் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எப்போது டெல்லிக்கு வந்தாலும் அவர்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன். அதே நேரத்தில் அரசியலும் பேசுவோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.