படித்து எந்த பயனும் இல்லை... பஞ்சர் கடை வைக்கலாம்.. - கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கல்லூரி திறப்பு விழாவில் பேசிய பாஜக எம்.எல்.ஏ படித்து பட்டம் பெறுவதால் பயனில்லை. மோட்டார் சைக்கிளுக்கு 'பஞ்சர்' பார்க்கும் கடை வைக்கலாம்' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற புதிய கல்லூரி ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற குணா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. 'படித்து பட்டம் பெறுவதால் எந்தப் பயனும் இல்லை. மோட்டார் சைக்கிள்களுக்கு 'பஞ்சர்' பார்க்கும் கடை வைக்கலாம்' என்று அறிவுரை கூறினார். இதனால் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் 'பிஎம் காலேஜ் ஆஃப் எக்சலன்ஸ்' (பிரதமர் சிறப்புக் கல்லூரி) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் இந்த புதிய கல்லூரிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை அன்று திறந்து வைத்தார்.
இந்த நிலையில் குணா மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தொகுதி எம்எல்ஏ பன்னாலால் சாக்யா பேசிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குணா தொகுதி எம்எல்ஏ பன்னாலால் என்ன பேசினார்?
பிரதமர் சிறப்புக் கல்லூரியைத் இந்த பகுதியில் தொடங்கியுள்ளோம். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டார் சைக்கிளுக்கு 'பஞ்சர்' பார்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும் என்றார்.
புதிய கல்லூரி திறப்பு விழாவில் படித்து முன்னேற வேண்டும் என அவர் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் படிப்பதை விட 'பஞ்சர்' ஒட்டுவது சிறந்தது என்று பேசியது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.