தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை - துரை வைகோ விமர்சனம்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து பேசிய அவர்,
“வாரிசு அரசியல் கூடாது என கூற முடியாது. தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் வந்துள்ளனர். பாஜகவிலும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களின் பிள்ளைகள் உள்ளன. பாஜக தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு அரசியலை பேசுவது நல்லதல்ல. மேலும் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியில் நாங்கள் எட்டாவது வருடமாக இருக்கிறோம். எந்த நோக்கத்திற்காக எந்த அடிப்படைக்காக நாங்கள் சேர்ந்தோமோ அந்த நோக்கம் இன்றும் தொடர்கிறது.
எங்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் எங்களுக்கு சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மக்களை பிளவுபடுத்த இடம் கொடுக்கக் கூடாது என்ற ஒற்றைக் கருத்துக்கு நாங்கள் எல்லாம் உடன்படுகின்றோம்.
அதுவே எதிரணியினர் எந்த நோக்கத்திற்காக சேர்கிறார்கள் , விலகுவார்கள் என்று தெரியவில்லை. நேற்று கூட என்.டி.ஏ கூட்டணியை விட்டு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் விலகி உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதற்கு முன்பு கூட ஓபிஎஸ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அவர்கள் கூட்டணியில் ஒற்றுமை கிடையாது என்பது தெரிய வருகிறது . மேலும் இன்னும் எட்டு மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. முதல்வர் சொன்னதுபோல் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்”
என தெரிவித்தார்.