"கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மீது குறைசொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை" - அமைச்சர் ரகுபதி பேட்டி
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது குறைசொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து சட்டத்துறை அமைச்சா் ரகுபதி மீனவ கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் ராமநாதபுரம் ராஜா மற்றும் மீனவர்களை வைத்து வழக்கு தொடர்ந்து கச்சதீவை மீட்டு காட்டுவோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் இதனை சொல்ல முடியுமா? 360 முதல் 400 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். எந்த நிதியும் இல்லாமல் திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூடுதல் நிதி தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்."
இவ்வாறு சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தார்.