மயானத்திற்கு பாதை இல்லை - சாலை நடுவே 2 உடல்களை வைத்து கிராமமக்கள் போராட்டம்!
மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் 2 உடல்களை சாலை நடுவே வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு
உட்பட்ட ஜம்புலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
அந்த கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்சாமி என்பவர் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை தன்னுடைய நிலம் என்று கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலி
அமைத்தார். இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதாக
கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை விவசாய நிலத்தின் வழியாகவும், அங்குள்ள கண்மாய் கரை வழியாகவும் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த முதியவர் தர்மராஜ் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.09) உயிரிழந்தார்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டியும் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (ஜன.10) உயிர் இழந்தார். தற்போது மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள விவசாய நிலப் பகுதியில் பயிர்கள் பயிர் செய்யப்பட்டு இருப்பதால் அந்த வழியாக உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டடுள்ளது.
மேலும் தொடர் மழையினால் கண்மாயில் நீர் நிரம்பியுள்ளதால் அந்த வழியாகவும் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கமாக கொண்டு சென்ற பாதை வழியாக உடல்களை கொண்டு செல்ல வலியுறுத்தி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் தாசில்தார் நாகராஜ் மற்றும் கழுகுமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்களை கொண்டு சென்ற பாதை வழியாக தான் உடல்களை கொண்டு செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்
ஆனால் வேல்சாமி குடும்பத்தினர் அது தங்களுக்கு சொந்தமான நிலம் என்றும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் கூறி அந்த பாதை வழியாக உடல்களை கொண்டு செல்ல மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இறந்தவர்களின் 2 உடல்களையும் கொண்டு சென்று சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இருந்த போதிலும் பொதுமக்கள் போலீசாரை மீறி இறந்த மூதாட்டி வள்ளியம்மாளின் உடலை கொண்டு சென்று , கழுகுமலை - கயத்தாறு சாலையின் நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டி உடலை ஊருக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மயானத்திற்கு செல்ல மாற்று வழி ஏற்பாடு செய்து தருவதாகவும், பிரச்னைக்குரிய பாதை தொடர்பாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் டி.எஸ்.பி. வெங்கடேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கள் வேல்சாமி கம்பி வேலி அமைத்துள்ள பாதை வழியாக தான் உடல்களை கொண்டு செல்வோம் என்று சொன்னதை திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டு இருந்ததால் போராட்டம் பல மணி நேரமாக நீடித்தது. பின்னர் ஒரு வழியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அக்கிராம மக்கள் மயானத்திற்கு கொண்டு செல்ல மாட்டோம் என்று கூறி அங்குள்ள தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் இரு உடல்களை எரியூட்டினர். இதனால் 7 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.