“சிறைக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை” - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
“காங்கிரஸ் தலைவர்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவார்கள். இடதுசாரி தலைவர்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
கேரளாவில் முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, இரு மாநில முதலமைச்சர்கள் ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு மத்திய பாஜக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்னிடம் கூட அமலாக்கத் துறையினர் 55 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். எனது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. ஆனால் அவர் இதுவரை எந்த விசாரணைக்கும் அழைக்கப்படவும் இல்லை, சிறையில் அடைக்கப்படவும் இல்லை எனப் பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
“உங்களின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தி ஏராளமான இடதுசாரி தலைவர்களை சிறையில் தள்ளினார். அப்போது நானும் கூட சிறையில் அடைக்கப்பட்டேன். நாங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தோம். ஏராளமான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம். எனவே, வழக்கு விசாரணைக்கும், சிறைக்குச் செல்லவும் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்றவற்றின் மூலம் எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அதுபற்றி கவலைப்படுவதில்லை” என தெரிவித்துள்ளார்.