வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை...! - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!
நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான அவரது அறிவிப்புகள் பின்வருமாறு :
- பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்கான கால அளவு 2013-ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது அது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை.
- இறக்குமதி வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இல்லை
- நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான விகிதங்களிலும் மாற்றம் இல்லை.
இதையும் படியுங்கள் : 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
- பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் 1 கோடி வரி செலுத்துவோர் பயன்பெறுவர்.
- ஓய்வூதிய நிதிகளுக்கு சில வரிச் சலுகைகளை மத்திய நிதியமைச்சகம் முன்மொழிகிறது
- 2014-க்குப் பின்னர், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்காக அதிகரித்துள்ளது.