“சசிகலா மற்றும் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” - இபிஎஸ் பேட்டி!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது “திமுக ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளை மறைப்பதற்காக முதலமைச்சர் கூட்டு நடவடிக்கை குழு என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும்.
திமுகவினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். அதில் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லையே. காங்கிரஸ் எம்.பி.க்களும் கலந்துகொண்டிந்தால் உண்மையாகவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து இவர்கள் நடந்தும் முயற்சி பலனளிக்கும் என நினைக்கலாம். எனவே , கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல், சட்டம் - ஒழுக்கு பாதிப்பை மடைமாற்றும் வகையில் பிரதிபலிக்கிறது.
டாஸ்மாக் ஊழல் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த கூட்டணி அமைப்போம். கூட்டணி என்பது நிலையானது கிடையாது. தங்கம் வெள்ளி நிலவரம் போல் தமிழ்நாட்டில் கொலை நிலவரம் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளதால் பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.
சென்னையில் நேற்று(மார்ச்.23) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் நடைமுறையை தொடர வேண்டும் என்ற சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.