For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

05:08 PM Jan 12, 2024 IST | Web Editor
“வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை ”   உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Advertisement

மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த உத்தரவிடக்கோரி,  அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் உள்பட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.  அந்த மனுவில்,  அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  இது தொடர்பான ஒரு வழக்கில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடங்கிய குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் கொண்ட விழா கமிட்டியே ஜல்லிக்கட்டை நடத்துகிறது. அவனியாபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.  ஜனவரி 15ல் நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.  அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 98 பேர் பங்கேற்று சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளை கொண்ட குழுவும் ஆலோசனைகளை வழங்க அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கடந்த ஆண்டை போல மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது தனிநபர்களோ,  மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனையும்,  இடையூறும் செய்யக்கூடாது.  மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags :
Advertisement