”திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல்” - எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”திமுக ஆட்சிக்கு வந்து 53 மாத காலம் ஆகியுள்ளது. ஆனால் இதுவரை இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 59 ஏரிகளில் மட்டுமே நீர் நிரப்பப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஏரிகள் அனைத்தும் வறண்ட ஏரிகளாகவே உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நீரேற்று திட்டத்தின் மூலமாக வறட்சியான பகுதிகளுக்கு தங்களது பகுதிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது விவசாயிகளுக்கு எந்தெந்த முறையில் உதவ முடியுமோ அந்தந்த முறைகள் உதவும் அரசாக அதிமுக அரசு இருந்தது.
என்னுடைய அதிமுக தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு செல்லும் இடத்தில் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கிறார்கள்.. நாங்கள் கூட தலைமையின் ஆணை பெற்று வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
டிடிவி தினகரன் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனங்களை செய்து வருகிறார். யாரும் அவரை ஆதரிக்கவில்லை. இதனால் இது போன்ற வார்த்தைகளை பேசி வருகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும்.
அதிமுக கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட உள்ள கூட்டணி எல்லாம் சுயமாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பல பேர் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். திமுக தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டணி இப்பொழுது விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசல் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறிவிட்டோம்.
நயினார் நாகேந்திரன் இன்று தேர்தல் பிரச்சார பரப்புரை துவங்குகிறார். இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றன. நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்" என்றார்.