"தலைவன் இருக்கிறான் மயங்காதே.." - மதுரையில் விஜய்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகயும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் போஸ்டர்களும் ஒட்டி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரையின் பல பகுதிகளில் விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..' என்ற பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'We Stand With TVK Vijay Anna' என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.