"இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை" - பிரதமர் மோடி பேச்சு
குஜராத்தில் உள்ள உயா் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி (சோல்) சாா்பில் முதலாவது தலைமைத்துவ மாநாடு, டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று (பிப்.22) தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்தியிருக்கின்றது.
மத்திய அரசை பொறுத்தவரையில் அனைத்து மொழிகளையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதுகிறது. எனவே, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு. இப்போது மராத்தி மொழியிலேயே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியை கற்க முடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது இலக்கியங்கள் நமது சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற ஒன்று.
இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த வேகத்தை விரைவுபடுத்த, நமக்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள் தேவை. இன்று, உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய மற்றும் பிரச்னைகளைத் தீர்க்கும் அதே வேளையில் தேசிய நலனை முன்னணியில் வைத்திருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் துடிப்பான தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.