தேனி வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நிலவுகின்ற ஒன்று என்பதும், இந்தக் காலகட்டத்தில் பல கட்டங்களாக மழைப் பொழிவு இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அதிகனமழை தேனி மாவட்டத்தில் பெய்துள்ளது. இதன் விளைவாக, கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கம்பம், சுருளிப்பட்டி, தேனி வீரபாண்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி தேமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கோழிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நிவாரண நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அந்த மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும்; சேதமடைந்த பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"
என்று தெரிவித்துள்ளார்.