திருட்டு பழி: மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி - உறவினர்கள் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - வானதி தம்பதியினரின் மகள் அனுப்பிரியா. கோவிந்தராஜ் இறந்துவிட்ட நிலையில் வானதியின் அரவணைப்பில் உள்ள அனுப்பிரியா கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அனுப்பிரியா மருத்துவமனையின் நான்காவது
மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து
அனுப்பிரியாவை மீட்ட மருத்துவமனையின் நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மருத்துவமனை நிர்வாகம், பீளமேடு போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அனுப்பிரியா நேற்று பணியில் இருந்த போது, உடன் பணியில் இருந்த மாணவனின் 1500 ரூபாய் பணத்தை திருடிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அனுப்பிரியாவின் உடைமைகளையும் சோதனை செய்ததாக
கூறப்படுகிறது.
மேலும் நீண்ட நேரமாக அனுப்பிரியாவின் மீது திருட்டு பழி சுமத்தி, கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், மனமுடைந்த மாணவி மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே ரூ.1,500 பணம் திருடியதாக மாணவர் மீது வீண் பழி சுமத்தி கல்லூரி
நிர்வாகம் கடுமையாக கண்டித்ததாகவும், இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகவே மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கிடங்கு முன்பு கூடிய மருத்துவ மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் மாணவியின் மீது பழி சுமத்திய மாணவன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
எனவும் கோரிக்கை விடுத்த மாணவர்கள், இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் வரும் 21ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.