“அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” - என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதே நேரத்தில், அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் விளக்கமளிக்க 3 வாரம் அவகாசம் அளித்து வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது என்.ஆர்.இளங்கோ பேசியதாவது:
அமலாக்க துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான ஒரு வழக்கு உரிய காவல்துறையால் பதியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அமலாக்கதுறை 4 முதல் தகவல் அறிக்கையை வைத்துக் கொண்டு இந்த வழக்கை விசாரிக்க போவதாக சொல்லியுள்ளார்கள். அந்த 4 வழக்குகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளுக்கு சம்பந்தம் இல்லாதவை. தனியார் மணல் கொள்ளைகாரர்களால் நடத்தப்பட்ட குவாரிகளில் போலியாக ஆதாரங்களை வைத்துக் கொண்டு அமலாக்க துறை இந்த வழக்கை பதிவு செய்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
அமலாக்கதுறை தன்னுடைய பதிலில் நாங்கள் எவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ளது என்பதை சேகரித்துள்ளோம் என பொய்யான தகவல்களை உயர்நீதிமன்றித்தில் கொடுத்துள்ளார்கள். ஆனால் மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் சொல்லியுள்ளது.
மணல் விவகாரத்தில் கொள்ளை போயிருப்பதாக அமலாக்கதுறைக்கு தகவல் கிடைத்தாலும், சட்டவிரோத பணபரிமாற்ற சட்டம் 66 ன் கீழ் அரசிற்கும், அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் தந்து தான் விசாரிக்க சொல்லியிருக்க வேண்டும், அமலாக்க துறையினரே அந்த விசாரணையை நடத்த கூடாது.
அதே போல் மாநில புலன் விசாரணை அமைப்புகளால் மணல் உட்பட ஏதேனும் விவகாரங்களில் குற்றம் நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டால் மட்டும் தான், அந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணம் கைமாறப்பட்டுள்ளதா என்ற வகையில் அமலாக்க துறை விசாரணை நடத்த முடியும். தங்களுக்கு அதிகாரம் இல்லாத , மணல் கொள்ளை நடந்ததா இல்லையா என்ற விசாரணையை அமலாக்க துறை சட்டத்திற்கு புறம்பாக நடத்த கூடாது என்று தான் வாதம் செய்தோம். அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி அமலாக்கதுறை இந்த விசாரணையை செய்ய முடியாது. ஒருவேளை மணல் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்க துறைக்கு தெரிய வந்திருந்தால் அந்த தகவலை தமிழக அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தினால் அந்த புலன் விசாரணை அமைப்புகள் மட்டுமே விசாரிக்க முடியும். அப்படி புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை கொடுத்தால், அதன் அடிப்படையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற விசாரணையை மட்டும் தான் அமலாக்க துறை செய்ய முடியும்.
அரசு அதிகாரிகளை அழைக்கும் போது பிரிவு 50 , 2 ன் கீழ் சம்மன் கொடுக்க அதிகாரம் கிடையாது. அது முறையற்ற புலன் விசாரணை. சட்டவிரோத பணபரிமாற்ற சட்ட அடிப்படையில் அமலாக்க துறையினர் மாநில அரசின் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றால் பிரிவு 54 ன் கீழ் மட்டும் தான் சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும். ஒன்றிய அரசு எங்கு புலன் விசாரணை செய்ய வேண்டுமோ , அங்கு மட்டும் தான் செய்ய வேண்டும் மாநில அரசின் அதிகாரங்களை கையில் எடுப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழக அரசின் மீது களங்கம் விளைவிக்க மட்டுமே இந்த வழக்கை போட்டுள்ளார்கள் என்பது அவர்கள் தந்துள்ள பதில் மனுவின் வாயிலாக தெரியவந்துள்ளது. 2016 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. அப்போது தேர்தல் பரப்புரையில் அமித்ஷா , அதிமுக ஆட்சியில் ஏறக்குறைய 20 ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் பாஜக வினர் , அதிமுக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மணல் கொள்ளை குறித்த வழக்குகள் நடைபெற்று கொண்டுள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எவ்வளவு மணல் கொள்ளை வழக்குகள் உள்ளன என்ற பட்டியலையும் நீதிமன்றத்திலும் சமர்பித்துள்ளோம். அங்கு அமலாக்கதுறையினர் எந்த புலன் விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.
2024 தேர்தலை எதிர்நோக்கி உள்ள நேரத்தில், திமுக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் 4730 கோடி ருபாய் அரசிற்கு வந்திருக்க வேண்டியது வரவில்லை என பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 2011 -12 ஆம் ஆண்டில் 31 லட்சம் லோடுகள் மணல் விற்பனை அரசால் நடந்துள்ளது. 2020 – 21 ல் 1.5 லட்சம் லோடுகள் மட்டும் தான் விற்பனை செய்ய முடிந்தது. ஆற்று மணலுக்கு பதிலாக இ சேண்ட் மணல் விற்பனைக்கு வந்ததால் மக்களிடம் ஆற்று மணல் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. 2021 – 22 ஆம் ஆண்டில் அது 80 ஆயிரம் லோடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆய்வு மற்றும் அறிவு கூட இல்லாமல் 27.75 லட்சம் லோடுகள் விற்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான கணக்கை பதில் மனுவில் தாக்கல் செய்துள்ளனர். விளக்கம் கேட்ட நோட்டிஸில் , தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் காரணம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
பாஜகவின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் அவர்கள் மீது கோபமாக இருப்பதாலும் மிகப்பெரிய பின்னடைவு வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு ஏற்படும். பாஜகவினர் யாரையாவது திட்டுகிறார்கள் என்றால் அவர்கள் நல்லவர்கள் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். பொய்யர்கள் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக பாஜக கூட்டணி விரிசல் என்பதும் போலியான நாடகம் என்பதை பலமுறை திமுக வின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
எதிர்கட்சியை சேர்ந்த அரசியல் வாதிகள் மீது மட்டும் தான் பாஜகவினர் வழக்கு போட்டுள்ளனர். அரசு அதிகாரிகளை மிரட்டி ஒரு வாக்குமூலம் வாங்கினால் அதை வைத்து வழக்கு போட முடியாதா என்றும் அமலாக்கதுறையினர் பார்க்கின்றனர். முத்தையா என்ற அதிகாரி கூறும் போது கூட , தன்னை துன்புறத்தி அமலாக்கதுறையினர் வாக்குமூலம் வாங்கியதாக பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையில் புகாரே கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை முழு விசாரணைக்கு வரும் 21 ஆம் தேதி எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது அரசு குவாரிகளில் எந்தவிதமான மணல் கொள்ளையும் , முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.
சட்டவிரோத பணபரிமாற்ற சட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் ஒருவர் , ஜாமின் வேண்டும் என்றால் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். அதே நேரம் அவரின் உடல்நிலை பாதிப்படைந்திருந்தால் இந்த விதி தளர்த்தப்படும். அதனால் தான் மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கேட்டோம். அது நீதிமன்றத்திற்கு திருப்தியாக இல்லை என்பதால் கீழ் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட சொல்லியுள்ளார்கள். ஜாமின் வழங்குவதற்காக முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கருதியிருந்தால் டிஸ்மிஸ் செய்திருக்கலாம் , ஆனல் அப்படி செய்யாமல் , ஜாமின் வழங்க முகாந்திரம் இருப்பதால் கீழ் நீதிமன்றம் சென்று மெரிட்ஸ் படி கேட்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
செந்தில்பாலாஜி தொடர்புடைய வழக்கும் பொய்யான ஆதராங்களின் அடிப்படையில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது , அதை மெரிட்ஸ் படி ஜாமின் கேட்கும் போது தாக்கல் செய்வோம். இவ்வாறு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.