“உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” - உதயநிதி ஸ்டாலின்
உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர் உதயநிதி
பங்கேற்று பேசினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர்
நேற்று முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கிவைத்தார். அனைத்துலக முத்தமிழ்
முருகன் மாநாட்டில் காணொளி காட்சி மூலமாக பங்கேற்று பேசுவது பெருமகிழ்ச்சியுடன் பெருமை அடைகிறேன். உலகமெங்கும் ஆன்மிக பெரியோர்களும், தமிழறிஞர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்க வாய்ப்பு தந்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சேகர் பாபுவை எப்போதும் செயல்பாபு என்றுதான் நமது முதல்வர் அழைப்பார். அது எவ்வளவு உண்மை என்பது மாநாட்டின் ஏற்பாடுகளை பார்க்கும்போதே தெரிகிறது. செய்தி தாள்களையும், செய்தி செனல்களையும் பார்த்தால் எப்போதும் ஏதாவது ஒரு கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான் இருப்பார். நமது முதலமைச்சர் கூறியது போல் கோயிலில் தான் அவர் குடியிருப்பார் என்பது போல் அவரது பணி சிறந்து விளங்குகிறது.
இன்றைக்கு நமது அரசு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி அறநிலையத்துறை தன்னுடைய பணிகளை அறத்தோடு முன்னெடுத்து செய்கிறது என்றால்
அதற்கு காரணம் சேகர்பாபு தான். நாத்திக தோட்டத்தில் பூத்த ஆத்திக மலராக அமைச்சர் சேகர் பாபு மணம் வீசி கொண்டிருக்கிறார். நம்முடைய திமுக அரசு திடிரென இந்த மாநாட்டை நடத்துகிறது என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநாடு திடிரென நடத்துப்படுகிற மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டுதான் இந்த மாநாட்டை நடத்துகிறது.
திமுக அரசை பொருத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காததுதான் திராவிட மாடல் அரசு. குன்றக்குடி அடிகளார் கொடுத்த விபூதியை நெற்றி நிறைய பூசியவர்தான் பெரியார். ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா. ஓடாத தேரை ஓட வைத்தவர் தான் கருணாநிதி. நமது தலைவர்கள் வழியில் முதலமைச்சர் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக அரசு அமைந்த இந்த 3ஆண்டுகளில் மட்டும் 1400க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 5600கோடி மதிப்பிலான சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
3800 கோடி மதிப்பில் 8500 கோவில்களில் திருப்பணி நடந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாட்டிற்கே முன்மாதிரியாக பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயணம் சுமார் 4000 மாணவ மாணவிகளுக்கு இடையில் காலை உணவு வழங்கப்படுகிறது. விரைவில் மதிய உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.
எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான் அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர்தான் நம்முடைய முதலமைச்சர். அதேபோல் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற துறைகளைப் போலவே இந்து சமய அறநிலையத் துறையும் நாட்டிற்கு வழிகாட்டி வருகிறது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை செய்து விட்டுத்தான் இந்த சிறப்புக்குரிய மாநாட்டை நமது தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்று வருகிறது. அரசு இந்த முயற்சிகளை எல்லாம் ஆன்மீகப் பெரியோர்களும், பக்தர்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி. இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.