"விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும்" - ஆதவ் அர்ஜூனா பேட்டி
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, விஜய் பிரச்சாரம் செய்த வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? அவர் மீது ஏன் வழக்கு பதியவில்லை என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். சற்று நேரத்தில் அந்த பதிவை அவர் நீக்கினார். இருப்பினும், அவரின் பதிவுகள் இணையத்தில் பரவியது. இது தொடர்பான விசாரணையில், ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல ஆதவ் அர்ஜுனா கருத்து பதிவிட்டுள்ளார். பின்புலத்தை விசாரித்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் ஒரு சின்ன வார்த்தைகூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும், இவர்களென்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று நீதிபதி செந்தில்குமார் காட்டம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க சென்ற ஆதவ் அர்ஜூனா உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மீண்டும் தவெக பிரச்சாரத்தை தொடங்குமா? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், "நாங்கள் நீதிக்காக பாடுபடுகிறோம். விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும்" என்று பதிலளித்தார்.