“உலகம் வியப்படைகிறது, பாகிஸ்தான் பயப்படுகிறது” - ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமித் ஷா பெருமிதம்!
குஜராத் மாநிலம் பெத்தாப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரதமர் மோடி பயங்கரவாத தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். உலகமே வியப்படைகிறது, பாகிஸ்தானும் பயப்படுகிறது. இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்த அவர்களின் 9 மறைவிடங்களை அழித்தோம்.
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. தூரம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்திய மக்களுக்கு ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கையால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான பதில் இரண்டு மடங்கு பலமாக இருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான நமது வான் பாதுகாப்பு படை சிறப்பாக செயல்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் தாக்க முற்பட்டபோது, அதன் ஏவுகணைகளும் ட்ரோன்களும் இந்திய நிலத்தை எட்டவில்லை.
100க்கும் மேற்பட்ட பயங்கர பயங்கரவாதிகளைக் கொன்ற பிறகும், பாகிஸ்தான் யோசித்துக்கொண்டிருந்தது. நாங்கள் பாகிஸ்தானின் 15 விமானத் தளங்களைத் தாக்கினோம். ஆனால் பொதுமக்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை. அவர்களின் வான்வழித் தாக்குதலை மட்டுமே அழித்தோம்.
சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று 100 கி.மீ. வரை தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது இதுவே முதல் முறை. அணுகுண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டி, பயப்படுவோம் என்று நினைத்தார்கள். ஆனால், நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளன, நமது ராணுவத்தின் பொறுமையையும் பிரதமர் மோடியின் உறுதியான தலைமையையும் உலகமே போற்றுகிறது”
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.