கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ் இருப்பது, மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்துவிடலாம், இது மிகவும் எளிதானதும் கூட. தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸானது பறவைகள், விலங்குகள், மனிதர்களிடையே பரவி வருகிறது.
இந்த வைரஸானது மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி அவர்களைக் கொல்கிறது. இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் மாடு சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவிலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவது சுகாதார அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கோழிகளுக்கு மட்டும் பரவி வந்த பறவைக்காய்ச்சல், அங்குள்ள வாத்துகளுக்கும் பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.