தென்காசியில் இரண்டாவது நாளாக தொடரும் கழுகுகள் கணக்கெடுக்கும் பணி!
தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பு பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உள்ள வன உயிரிகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றின் வாழிட மேலாண்மை குறித்தும் அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதுவரை விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக கழுகுகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு பணியானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
குறிப்பாக, கழுகு இனங்கள் தற்போது படிப்படியாக அழிந்து வரும் நிலையில், அந்த
இனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், அவைகளுக்கு ஏற்றார் போல் வாழிட சூழ்நிலைகளை அமைத்து தரும் வகையில் கழுகுகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கடையநல்லூர் வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட மேக்கரை, பண்பொழி, வடகரை, சொக்கம்பட்டி, உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கடையநல்லூர் வனசரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் கழுகுகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில், கழுகுகளின் எண்ணிக்கை, கழுகு இனங்கள் படிப்படியாக அழிந்து வருவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றிற்கான ஆய்வுகள் நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.