முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலமைச்சரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அறிந்ததும், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அறிந்து கவலை தெரிவித்ததோடு, விரைவில் அவர் பூரண குணமடைந்து மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான ரஜினிகாந்த் அவர்களும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்து, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.