#Mumbai | உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் - நொடியில் காப்பாற்றிய டிரைவர்!
மும்பையில் பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை, டாக்ஸி டிரைவரும் காவல்துறையினரும் போராடி காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடல் சேது என்ற பாலம் அமைந்துள்ளது. கடல் மீது அமைக்கப்பட்ட இந்த பாலத்திற்கு ரீமா முகேஷ் படேல் என்ற பெண் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் கால் டாக்ஸியில் சென்றிருந்தார். பாலத்தை அடைந்ததும் காரில் இருந்து இறங்கிய அவர், பாலத்தின் பக்கவாட்டில் இருக்கும் தடுப்புக்கு அருகே சென்று, பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்ஸி டிரைவர் அப்பெண்ணிக் தலைமுடியைப் பிடித்து அவர் கீழே விழாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் அவரால் அந்த பெண்ணை மேலே தூக்க முடியவில்லை. அதே நேரத்தில், அப்பகுதி வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் நான்கு பேர் உடனடியாக ரீமாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இறுதியில் காவலர்களும் டாக்ஸி டிரைவரும் ஒன்றாக சேர்ந்து, ரீமாவை பாலத்தின் மேற்பகுதிக்கு தூக்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி மும்பை காவல் ஆணையரின் அதிகாரபூர்வ எக்ஸ் தளபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த காட்சி வைரலாக பரவியது. மேலும், ரீமாவிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.