For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஹமாஸ் அமைப்பினருடனான போர் தொடரும்" -  அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமா் உரை!

10:22 AM Jul 26, 2024 IST | Web Editor
 ஹமாஸ் அமைப்பினருடனான போர் தொடரும்     அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமா் உரை
Advertisement

ஹமாஸ் அமைப்பினருடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை அந்தப் போரை தொடா்ந்து நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.  இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில்,  அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் உரையாற்றினாா்.  அந்த உரையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,  "ஹமாஸ் அமைப்பினருடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை அந்தப் போரை தொடா்ந்து நடத்துவோம். இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம்.

இந்தப் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோா் ஈரானால் பயன்படுத்திக்கொள்ளப்படும் கைப்பாவைகள்.  காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதிபா் ஜோ பைடன் செயல்படுவது பாராட்டுக்குரியது.  காஸாவில் பாலஸ்தீனா்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் இருப்பதற்கு உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பது காரணமல்ல.  அவா்களுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஹமாஸ் அமைப்பினா் திருடிக்கொள்வதுதான் காரணம்" என்றாா்.

முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு வந்தபோது, அவையினா் 8 நிமிஷங்கள் எழுந்து நின்று தொடா்ந்து கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனா்.  அவா் உரையாற்றிக் கொண்டிருந்தபோதும் 8 முறை அவையினா் எழுந்து நின்று கரவொலி எழுப்பினா்.  காஸா போரில் நெதன்யாகுவின் கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, முன்னாள் அவைத் தலைவா் நான்சி பெலோசி உள்ளிட்ட 42 ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களும் குடியரசுக் கட்சி எம்.பி.யான தாமஸ் மேஸியும் டிரம்ப் உரையைப் புறக்கணித்தனா்.

தொடர்ந்து, நெதன்யாகுவின் அமெரிக்க நாடாளுமன்ற உரைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கு நெதன்யாகு சென்றுள்ளது, போா் விவகாரத்தில் தனக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்ளத்தான். அவா் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமரச நடவடிக்கைகள் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

Tags :
Advertisement