”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!
கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக தினசரி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கூடிய மாநிலங்களவையில் கப்பல் போக்குவரத்து மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.
அப்போது பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரினர். ஆனால் விவாதம் எடுத்தகொள்ளப் படவில்லை. மேலும் காங்கிகிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கர்கேவை பேச அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டவர்களாக மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மக்கள் கையில் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை. ஆனால் அந்த வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆர் உள்ளது. பீகாரில் இந்த நடைமுறையால் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்கள் கணக்குபடி 1 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் எவ்வாறு முறைகேடு நடக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியிருந்தார் ஆனால் அது குறித்து எந்த ஒரு விவாதமும் நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. இந்நிலையில் சுமார் 300க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
பாஜக அரசு நாடாளுமன்றத்தில் எதையுமே விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அவர்கள் எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் தங்களுக்கு தேவையான மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்று தேர்தல் ஆணையர் சந்திப்பதற்கு பேரணியாக சென்றதை எதற்காக தடுத்து நிறுத்துகிறார்கள். இந்த கேள்வியை அவையில் எழுப்பினால் அதற்கும் பதில் கூற மறுக்கிறார்கள். இந்தியாவின் ஜனநாயகம் ஒடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”
என்று தெரிவித்தார்