For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக அண்ணாமலை கண்கலங்கினார் என பரவும் வீடியோ? உண்மை என்ன?

10:13 AM Jun 11, 2024 IST | Web Editor
தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக அண்ணாமலை கண்கலங்கினார் என பரவும் வீடியோ  உண்மை என்ன
Advertisement

This news Fact Checked by The Quint

Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்காக அண்ணாமலை கண்கலங்கினார் என வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து தி குயிண்ட் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.  இதுகுறித்து விரிவாக காணலாம்.

மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது.  மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளை வென்றது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக,  அதிமுக,  பாஜக மற்றும் நாதக என நான்குமுனை போட்டி நிலவியது.  இவற்றில் பாஜக கூட்டணியில் பாமக,  அமமுக,  தமாகா,  புதிய நீதிக் கட்சி,  ஐஜேகே,  தமமுக,  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றனர்.  தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியை தழுவியது.

 தேர்தல் தோல்விக்காக அண்ணாமலை கண்கலங்கினாரா?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மேடையில் உரையாற்றும் போது கண்கலங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  மக்களவைத்  தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அவர் தோல்வியடைந்த பிறகு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக வீடியோவைப் பகிர்ந்துள்ள பயனர்கள் கூறுகின்றனர் .

அந்த பதிவின் கேப்சனில்  " 24 மணி நேரமும் கடந்த 3ஆண்டுகளாக அண்ணாமலை கடுமையாக உழைத்தார்.  தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் சென்றார்.  பாஜகவின் வாக்கு சதவீதம்  தமிழ்நாட்டில் தற்போது 19% ஆக உயர்ந்துள்ளது.  அவர் பொறுப்பேற்ற போது அது வெறும் 8% ஆக மட்டுமே இருந்தது.  அவரது கண்ணீருக்கு  நிறைய அர்த்தம் இருக்கிறது.  அவர் மீண்டும் வருவார். அவரை நான் நேசிக்கிறேன், எப்போதும் அவரை ஆதரிப்பேன்.” என அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்கலங்கியதாக பரவும் வீடியோ குறித்து உண்மை சரிபார்ப்புக்கு தி குயிண்ட் செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.  அண்ணாமலை தொடர்பான சில முக்கிய வார்த்தைகளுடன் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியது.  இது ஒரு  யூடியூப் வீடியோவிற்கு அழைத்துச் சென்றது.  இந்தக் காணொலியானது ஏப்ரல் 2024ல் கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் அண்ணாமலை உணர்ச்சி பொங்க ஆற்றிய உரையின் வீடியோ என கண்டறியப்பட்டது.

மேலும் இது தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக ஏப்ரல் 17 அன்று நியூஸ்18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது.  அதேபோல கூகுளில் 'அண்ணாமலை மேடையில் அழும் வீடியோ' எனும் குறிசொற்களை  பயன்படுத்தி தமிழ் மொழியில் முக்கிய வார்த்தைகளைத் தேடினோம், இது தினமலர் நாளிதழின் செய்தி அறிக்கையை காட்டியது.

இதுவும் ஏப்ரல் 17ஆம் தேதியில் ‘கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் அண்ணாமலை மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்’ என வெளியாகியிருந்தது.   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களிடம் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

முடிவு :

2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததால்  அண்ணாமலை கண் கலங்கினார் என பரவும் வீடியோ பழைய வீடியோ என்பது ஆதாரப்பூர்வ தகவல்களின் மூலம் உறுதியாகிறது.

Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement