“மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” - ஓபிஎஸ் அறிக்கை!
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று “மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/vA3djyTOri
— O Panneerselvam (@OfficeOfOPS) February 17, 2025
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கடைபிடித்தார்கள்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.