“இஸ்ரேல் உடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” - எஸ்டிபிஐ வலியுறுத்தல்!
“அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிய இஸ்ரேல் உடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” என எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது.
இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் – சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 45 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து கடந்த இரு நாட்களாக “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக்கை ஷேர் செய்து உலக நாடுகள் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவின் மீது இஸ்ரேலின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், குழந்தைகள், பெண்கள் என பாராமல் அப்பாவி மக்கள் மீது குண்டுவீசிய இஸ்ரேல் உடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஐநாவும் இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், பாலஸ்தீனத்தில் மிஞ்சி இருக்கக் கூடிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கையில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.