இலங்கை கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து - 7 பேர் பலி!
இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
பொதுவாக, கார் பந்தயம் என்றாலே, சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. கார் பந்தயத்தின்போது மிகவும் அதிகமான பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படும். விதிமுறைகளை மீறியும் சில மோசமான விபத்துகள் நடைபெற்று வருகிறது. அப்படியொரு சம்பவம்தான், இப்போது இலங்கையில் நடந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஃபாக்ஸ் கார் சூப்பர் கிராஸ் என்ற கார் பந்தயம் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவ என்ற பகுதியில் இந்த கார் பந்தயம் நடந்தது. அந்த கார் பந்தயத்தைப் பார்க்க கிட்டத்தட்ட 45 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். அப்போதுதான் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது.
இதையும் படியுங்கள் : பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!
அந்தப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ட்ரேக்கில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ட்ரேக்கைவிட்டு மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் பாய்ந்தது. இதில் 8 வயது சிறுவன் உட்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமத்திக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
மேலும், தற்காலிகமாக இப்போது அந்த கார் பந்தயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையும் மோசமாகவுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.