“முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை” - பிரதமர் மோடி பேச்சு!
நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரயில்வே கோட்டம், தெலங்கானா மாநிலத்தில் சர்லபள்ளி ரயில்வே முனையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததுடன், கிழக்கு கடற்கரை ரயில் மண்டலத்தின்கீழ் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ராயாகாதா ரயில்வே கோட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று (ஜன. 6) அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஒடிஸா ஆளுநா் ஹரி பாபு கம்பம்பட்டி ஆகியோர் தங்களது மாநிலங்களில் இருந்தவாறு காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
“பொதுமக்கள் தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய விரும்புகின்றனர். இதனால் அதிவேக ரயில்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் 50 வழித்தடங்களுக்கு மேல் மொத்தம் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது.
ରେଳ ଭିତ୍ତିଭୂମି କ୍ଷେତ୍ରରେ ବିଗତ ବର୍ଷଗୁଡ଼ିକ ଓଡ଼ିଶା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଲାଭଦାୟକ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଛି । ବିଶେଷ କରି ଆଦିବାସୀ ବହୁଳ ଅଞ୍ଚଳରେ ଏହାର ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ସନ୍ତୋଷଜନକ । pic.twitter.com/IsErUMgq89
— Narendra Modi (@narendramodi) January 6, 2025
டெல்லியில் நமோ பாரத் ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் மெட்ரோ ரயில் வழித்தடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே துறையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் பல்வேறு புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் கதி சக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
மிக உயரமான ரயில்வே மேம்பாலம் சீனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது மெட்ரோ சேவைகள் 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.