"சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது" - பிரதமர் மோடி உரை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த நவ. 7-ம் தேதி நிறைவடைந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் நவ. 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முங்கேலியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கரில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதியாகிவிட்டது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு அதிக அளவில் வாக்களித்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சத்தீஸ்கர் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடையும். இளைஞர்களின் கனவுகள் நனவாகும், மஹ்தாரி சகோதரிகளின் வாழ்க்கை எளிதாகிவிடும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசை தூக்கி எறிவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.
இதையும் படியுங்கள்: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!
சத்தீஸ்கரின் பழங்குடியினர், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் காங்கிரஸிடமிருந்து விடைபெற ஆர்வமாக உள்ளனர். இங்குள்ள பெண்கள் காங்கிரஸ் ஆட்சி வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர்".
இவ்வாறு நரேந்திர மோடி சத்தீஸ்கர் மக்களிடையே உரையாற்றினார்.