For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!

04:37 PM Jan 05, 2024 IST | Web Editor
திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது.  பின்னர் இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது.  மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாக சிப்காட் பகுதி-3 தொழிற்பூங்காவினை அமைக்கும் பொருட்டு, உரிய ஆணைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன.  இதில் செய்யார் வட்டத்தில், மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள 3,174 ஏக்கர் பரப்பில்,  7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.  தற்போது, 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை.  மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில்,  நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில்,  தென்னங்கீற்று கொட்டகை அமைத்து,  கடந்த 02.07.2023-ஆம் தேதி முதல் தினசரி சுமார் 15 முதல் 20 நபர்களை கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது,  அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது,  நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது,  பணி செய்த காவலர்களை தாக்கியது, பொது உடமைகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக கடந்த 04.11.2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு,  நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய,  அருள் மற்றும் 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள்,  குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்களது உறவினர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனை அடுத்து, செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்து,  பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததன் காரணமாக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன்,  தேவன்,  சோழன்,  திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை பரிசீலனை செய்து,  அவர்களை குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

அதனடிப்படையில்,  மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆயினும் மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில்,  திருவண்ணாமலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.

அப்போது, “எந்த ஒரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில் மக்களை தூண்டினார் என்றும்,  நிலம் வழங்க முன்வருபவர்களை தடுத்ததார் என்றும் குற்றம் சாட்டப்படுள்ளது. 100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில்,  உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என நீதிபதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

மேலும் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்த விவரங்கள், கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம்,  காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில்,  மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மீதும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, இந்த விவகாரத்தில் போராடிய அனைத்து விவசாயிகள் மீதான குண்டர் சட்டமும் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement