For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செண்பகவல்லி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
07:57 AM Apr 16, 2025 IST | Web Editor
செண்பகவல்லி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து 9ஆம் தேர் திருவிழாவும், 10ம் நாள் தீர்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது.

Advertisement

இந்த நிலையில் 11ஆம் திருநாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கோயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags :
Advertisement