ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை - போலீசார் வலைவீச்சு!
மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி பிரேமலதா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டின் கதவை பூட்டி விட்டு, மாடியில் உள்ள அறையில் உறங்கினர்.
இருவரும் இன்று காலை எழுந்து வந்து பார்த்த போது கீழ் வீட்டு கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, பீரோ மற்றும் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்க பணம் மற்றும் 5 சவரம் தங்க நகை ஆகிய கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக தம்பதியினர் இது குறித்து மன்னார்குடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார்குடி போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.