இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களுடன் “சிஎஸ்கே” முதலிடம்...
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் முதல் இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது.
அதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை அணி நிர்வாகம். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
மும்பை அணியின் இந்த முடிவால், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ரோகித் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்ட மறு நொடியே, மும்பை அணியின் இன்ஸ்டா பக்கத்தை, பல ரசிகர்கள் Unfollow செய்ய தொடங்கினர். தற்போது வரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டா பக்கத்தில் அதிக பாலோவர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. இதனால் 13 மில்லியன் (1.3 கோடி) பாளோவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும், 12.9 (1.29 கோடி) மில்லியன் பாளோவர்களுடன் மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.