"இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது" - ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி
இந்திய ரசிகர்களின் ஆதரவே தங்களை ஊக்கப்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
"இந்திய ரசிகர்களின் அன்பு எங்களை திக்கு முக்காட வைத்துவிட்டது. ஒவ்வொரு போட்டியின் போது இந்திய ரசிகர்கள் எங்கள் அணிக்கு பெரும் ஊக்கத்தை அளித்தனர். களத்தில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் சந்தித்த போது, எங்களை அடையாளம் கண்டு ஆதரவு அளித்தனர்.
ஒரு முறை டாக்ஸி ஒன்றில் நான் பயணம் செய்த போது, அந்த டிரைவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மேலும் அந்த பயணத்திற்கு அவர் என்னிடம் இருந்து பணம் வாங்கவில்லை. இந்தியர்கள் எங்கள் மீது அதிக பிரியம் கொண்டுள்ளனர். இந்திய ரசிகர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்!”.
இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறியுள்ளார்.
உலகக்கோப்பை 2023 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணி இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதனையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிதி தன்னுடைய X தளத்தில், ஒரு அற்புதமான பயணம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இத் தொடரின் பயணமானது என்றும் நினைவில் இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அப்பதிவில், தங்கள் அணி எங்கு சென்றாலும் ஆதரவளித்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.