பதற்றத்துடன் நீட் தேர்வு மையத்தில் நின்றிருந்த மாணவி! - உதவிய பெண் காவலர்!
நீட் தேர்வு எழுத வந்த மாணவி பதற்றத்துடன் காணப்பட்டதை அறிந்தது உதவிய பெண் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வு இன்று (மே 5) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. வரும் ஜூன் 14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது. நீட் தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்குத் தேசிய தேர்வு முகமை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதில், “தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்கு மதியம் 01.30 மணிக்கு முன்பாக வர வேண்டும். மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தேர்வர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். காகிதம், பென்சில், கால்குலேட்டர், பிரேஸ்லெட், வாட்ச் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை. மாணவர்கள் குறிப்புகளை எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் தனியாக வழங்கப்படமாட்டாது. வினாத்தாள் புத்தகத்திலேயே எழுதிக்கொள்ளலாம். முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை நாரயணபுரம் பகுதியில் உள்ள SEV மெட்ரிக்பள்ளியின் தேர்வுமையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி காலில் அணிந்திருந்த கொலுசுடன் தேர்வு மையத்துக்குள் சென்றுள்ளார். இதை தொடர்ந்து அந்த மாணவியிடம் காலில் அணிந்த கொலுசை அகற்றி விட்டு வருமாறு தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையும் படியுங்கள் : மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் – சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு பதில்!
இதையடுத்து, அந்த மாணவி கொலுசை அகற்றி தனது தந்தையிடம் கொடுக்க அவரை தேடினார். தந்தையை காணாததால் வருத்ததுடனும், மேலும் தேர்வு சிறிது நேரத்தில் துவங்கி விடும் என்ற அச்சத்தினால் அந்த மாணவி கண்ணீர் சிந்தினார்.
பதற்றத்துடன் இருந்த மாணவியை பார்த்த அங்கிருந்த பெண் காவலர் அவரை அழைத்து விசாரித்தார்.பின்னர் அந்த மாணவியின் தந்தைக்கு செல்போன் மூலம் அழைத்து, கொலுசை ஒப்படைக்க உதவி உள்ளார். இந்த செயல் அங்கிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.