“டெல்லி மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரும்” - ராகுல் காந்தி எம்பி
தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று(பிப்.08) வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது. பெரும்பான்மையான வெற்றிக்கு 36 தொகுதிகளே தேவைப்பட்ட நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையாக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி, கால்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை.
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லி மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், “டெல்லியின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் . ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. டெல்லியின் முன்னேற்றத்திற்கும் டெல்லி மக்களின் உரிமைகளுக்கும் போராடுவதோடு மாசுபாடு, பணவீக்கம் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்தப் போராட்டம் தொடரும்”
இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.