தந்தையின் கொலைக்கு பழிவாங்கிய மகன் - ரவுடியின் மனமாற்றம்!
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகர், 1998 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அப்போது 11 வயதான அவரது மகன் ராஜேஷ் குமார், தனது தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்ந்தார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், ராஜேஷ் குமார் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார். 2016 ஆம் ஆண்டு மேல்மனமேடு ஊராட்சிமன்றத் தலைவர் தங்கராஜ் கொலை, 2018 ஆம் ஆண்டு தங்கராஜின் தம்பி வெங்கட்ராமன் கொலை, 2021 ஆம் ஆண்டு தங்கராஜின் உறவினரான தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் கருணாகரன் கொலை என மொத்தம் ஐந்து கொலை வழக்குகளில் அவர் தொடர்புடையவர்.
இதுமட்டுமல்லாமல், கொலை முயற்சி, ஆள் கடத்தல், மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த ராஜேஷ் குமார், திருந்தி வாழ விரும்புவதாகக் கூறி, ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையிலும், காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்து தன்னைத் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மீதுள்ள ஐந்து கொலை வழக்குகளில், இரண்டு வழக்குகளை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ள வழக்குகளுக்குத் தவறாமல் நீதிமன்றம் சென்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்குகளையும் விரைந்து முடித்து, ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகக் கூறினார்.
போலீசாரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதாகவும், தான் திருந்தி திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ விரும்பியதாலேயே துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மனுவை துணை ஆணையர் பெற்றுக்கொண்டு விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.